425. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4
டோ ண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.
சென்ற பதிவில் கமல் கூறிய ஒரு விஷயத்தை விட்டு விட்டேன். சில வருடங்களுக்கு முன் மருதநாயகம் திரைப்படத்துக்காக தான் அது வரை எழுதியிருந்த திரைக்கதை வசனத்தை சீர் செய்வதற்காக வாத்தியாருக்கு கமல் அனுப்பினாராம். சுஜாதாவும் நிறைய நேரம் செலவழித்து ரெவ்யூ செய்து, சிலபல இடங்களில் திருத்திக்
கொடுத்ததோடு, "திரைக்கதை-வசனம்: கமல், சுஜாதா" என்று கமல் குறிப்பிட்டிருந்ததில், "சுஜாதா"வை அடித்து விட்டு, 'என் பெயரை போடத் தேவையில்லை' என்று நோட் போட்டு கமலுக்கு திருப்பி அனுப்பினாராம் ! அதை நினைவு கூர்ந்த கமல், "மருதநாயகத்துக்கு எழுத இன்னும் நிறைய இருக்கும் சூழலில், சுஜாதா சொன்னது போல, அவர் பெயரைப் போட முடியாமலேயே போய் விட்டது, படம் எடுத்தால் என் பெயரைத் தான் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார்.
கவிப்பேரரசு வைரமுத்து:
சுஜாதா மரபுகளை உடைத்தவர் என்பது இரங்கல் கூட்டத்தில் கரவொலி கூடாது என்பதை மீறி அவரது வாசகர்கள் பல இடங்களில் தங்களை மறந்து கை தட்டுவதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது ! இங்கு கஸ்தூரி ரங்கன் பேசும்போது, சுஜாதாவின் உயிரற்ற முகத்தைப் பார்க்க தான் விரும்பவில்லை என்று சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. சுஜாதா விஷயத்தில், வாழ்வு தராத மலர்ச்சியை மரணம் அவருக்குத் தந்ததாகவே கருதுகிறேன். ஏனெனில், அவரது அமைதியான முகத்தைப் பார்த்தபோது, அவரது கடைசி எண்ணம் மலர்ந்த, எழுச்சி மிக்க எண்ணமாகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது ! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!)
செத்தபிறகு தான் எழுத்தாளர்களை தமிழர்கள் சிங்காரித்துப் பார்க்கிறார்கள். இதற்கு மாறாக, இருக்கும்போதே பாராட்டு விழா எடுக்க வேண்டும்! சுஜாதா வாழ்ந்தபோதே, இதே நாரதகான சபாவில் அவரை நடுநாயகமாக அமர்த்தி, நாமெல்லாம் அவரை பாராட்டிப் பேசியிருந்தால், அந்த பூரிப்பில் அவர் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரோ ?
சுஜாதாவின் எழுத்துகள் ஆழமான கடலுக்கு நிகரானது. அக்கடலில், சில வாசகர்கள் காலை மட்டும் நனைக்கவும் முடியும், சிலர் கட்டுமரம் செலுத்தவும் முடியும், சிலர் கப்பல் செலுத்தவும் முடியும், இன்னும் சிலர் அதில் மூழ்கி முத்தெடுக்கவும் முடியும் ! பிரபந்த வாசிப்பு அவருக்கு ஊட்டத்தைக் கொடுத்தது. மேல் நாட்டு இலக்கியதையும் நம் நாட்டு இலக்கியத்தையும் கலந்து அவர் தந்த fusion-ஐ, அதன் தனித்தன்மைக்காக
சுஜாதாயிஸம் என்று கூறுவேன்! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!) ஏதோ ஒரு கதையில், ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பற்றி சுஜாதா, "அவள் புன்னகையை மட்டும் அணிந்திருந்தாள்" என்று எழுதிய வரி என் மனதில் நிற்கிறது!
அவரது "தேவன் வருகை" சிறுகதையை உலகச் சிறுகதைகளில் சிறந்த பத்து கதைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். வாசகரை பலவித சாத்தியங்களை உணர வைக்க வல்லது அக்கதையின் முடிவு! 'வாசகன் பெரியவனா, மரணம் பெரியதா?' என்ற கேள்விக்கு வாசகன் தான் பெரியவன் என்று தான் பதில் கூற முடியும், ஏனெனில் மரணத்துக்குப் பின்னும் ஓர் எழுத்தாளனை (அவனது எழுத்துகளை) வாழ வைப்பது அவனது வாசகன் தானே !!!
சுஜாதாவின் மறைவிலிருந்து நான் கற்றது இவை தான்.
1. எழுத்தாளன் சாகும்வரை எழுதிக் கொண்டே இருக்க முடியும்
2. உடல் உபாதைகள் எழுத்துக்கு எதிரி அல்ல
3. சக எழுத்தாளன் பற்றி புறம் பேசாமை, சக எழுத்தாளனை மதித்தல்.
அடுத்துப் பேசிய பிரகாஷ் சுவாமி, வாத்தியார் அமெரிக்கா சென்றிருந்தபோது, அறுவை சிகிச்சை பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய 'All are my relatives' என்ற கட்டுரையை வாசித்த ரோஸன்தால் என்ற மூத்த பத்தரிகையாளர், சுஜாதாவின் ஆங்கிலப் புலமையையும், கட்டுரையின் satire-யையும், நகைச்சுவையையும் வெகுவாகப் பாராட்டி, வாத்தியாரின் நடை Art Buchwald-க்கு (அமெரிக்காவின் நம்பர் ஒன் நகைச்சுவை எழுத்தாளராக பலகாலம் விளங்கியவர்) நிகரானது என்று சிலாகித்ததை நினைவு கூர்ந்தார் !
வாத்தியார் பத்திரிகையாளர்கள் மேல் அன்பும் மரியாதையும் காட்டியவர் என்றும், ஒரு முறை Emmy விருதுகள் வழங்கும் ஜூரியில் ஒருவராக பிரகாஷ் சுவாமியை நியமித்தபோது, வாத்தியாருக்கு தொலைபேசிய அவர், அந்த விருது குறித்தும், விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் வழிவகை பற்றியும் தனது அறியாமையை
வெளிப்படையாக வாத்தியாரிடம் எடுத்துக் கூறினாராம் ! வாத்தியார் எழுதிஅனுப்பிய விளக்க மடல், ஒரு ஜூரியாக தன் கடமையை தான் செவ்வனே செய்வதற்கு மிக்க உறுதுணையாக இருந்ததை பிரகாஷ் குறிப்பிட்டு, சுஜாதாவுக்கு தெரியாத விஷயங்கள் மிகக் குறைவு என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் !
பதிவர் எல்லே ராம், சுஜாதாவின் யாகம் என்ற கதையை நாடகமாக ஆக்கி அமெரிக்காவில் அரங்கேற்றியதையும், வாத்தியாருக்கு எழுத்து உத்தியோகமாக இல்லாததால் தான் தமிழ் மேல் அவருக்கிருந்த காதல் மாறாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
சத்யராஜ், விக்ரம் படப்பிடிப்பின்போது வாத்தியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது என்றும், அவரது எழுத்து ஆளுமையையும், வாசிப்பையும் பார்த்து தான் பிரமித்தது பற்றியும் பேசினார். அவரது கடவுள் பற்றிய கட்டுரைகளிலோ அல்லது வாசகர் கடவுள் பற்றி கேள்வி எழுப்பும்போதோ, தான் மிகச் சிறந்த அறிவாளியாகக்
கருதும் சுஜாதா, 'கடவுள் இருக்கிறார்' என்று ஒருபோதும் கூறிவிடக் கூடாதே என்று தான் டென்ஷன் அடைந்தது (!) குறித்தும் பேசினார் !!!
கனிமொழி:
சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்படாத வாசகரோ, எழுத்தாளரோ இருக்க முடியாது! எது நல்ல சினிமா, எது நல்ல கதை என்று சுஜாதா வாயிலாக வருவதை மதித்த ஒரு வாசக / எழுத்தாள வட்டமிருக்கிறது என்பது தான் உண்மை, சிலர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட !!!
'ஒரு எழுத்தாளரின் வாசகராக நீங்கள் இருந்தால், அவரை நேரில் சந்திக்கக் கூடாது, நீங்கள் உங்களுள் உருவாக்கி வைத்த அவரது பிம்பம் கலைந்து விடக் கூடும்' என்று சுஜாதா சார் அடிக்கடி கூறுவார் என்றும், ஆனால் சுஜாதா விஷயத்தில் தான் நேர் எதிராக உணர்ந்ததாகவும் கனிமொழி உள்ளார்ந்த அன்போடு குறிப்பிட்டார். சுஜாதா சிறிதும் காழ்ப்பற்றவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை ஒரு எழுத்தாளர் சுஜாதாவை தாறுமாறாக விமர்சனம் செய்து வந்த விஷயத்தை கனிமொழி சுஜாதவிடம் சுட்டிக்காட்டியபோது, வாத்தியார் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதிய அருமையான ஹைக்கூ கவிதைகள் பற்றிக் கூறி பேச்சை மாற்றியதை குறிப்பிட்டார்!) என்றும், ஒரு Celebrity எழுத்தாளர் என்ற நினைப்பே இல்லாமல் இயல்பாகப் பழகியது பற்றியும், தான் அவரை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மிகச் சிறந்த மனிதராக எண்ணுவதாகவும் கனிமொழி தெரிவித்து தன் பேச்சை சுருக்கமாக நிறைவு செய்தார்.
(அடுத்த பதிவில் இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடையும்)
எ.அ.பாலா
4 மறுமொழிகள்:
sujatha sir, rest in peace !
பாலா ஒரே பதிவை இரு தடவை பதிப்பித்து விட்டீர்கள்
கவனிக்கவும்
அன்புடன் மகி
மகி,
நன்றி. டூப்ளிகேட் பதிவை அழித்து விட்டேன் !
நன்றி
Post a Comment